மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்காதது குறித்து அதிமுக கேள்வி
By DIN | Published On : 09th June 2019 12:40 AM | Last Updated : 09th June 2019 12:40 AM | அ+அ அ- |

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு எடுக்காதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து, புதுவை சட்டப் பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ. அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது: புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினால் ஆண்டுக்கு ரூ. 750 கோடி கூடுதல் வருவாயும், ரூ. 250 கோடி வருவாய் இழப்பும் தடுக்கப்படும். மின் கட்டணத்தை உயர்த்தியவுடன் எதிர்ப்புத் தெரிவித்தோம். இதையடுத்து, மின் கட்டணத்தைக் குறைப்பதாக முதல்வர் உறுதி அளித்தார். ஆனால், இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படவில்லை.
முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். கடந்த ஆண்டும் இதுபோல பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? அரசு ஊழியர்கள் காலை 8.45 மணிக்கு பணிக்கு வர வேண்டும். ஆனால், 10 மணி வரை 30 சதவீதம் பேர் வருவதில்லை. பலர் பயோ-மெட்ரிக் கருவியில் தங்களது கைரேகையைப் பதிவு செய்துவிட்டு, வெளியே கிளம்பிச் சென்றுவிடுகின்றனர்.
இடைக் கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததற்கான காலக்கெடு முடிய உள்ளது. அரும்பார்த்தபுரம் பாலத்தைக் கட்டி முடிக்காததால் இழப்பீட்டுத் தொகையை அதிகளவு தற்போது தர உள்ளனர். ரூ. 130 கோடிக்கு சுற்றுலாத் திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், முதல்வர் சுற்றுலா மேம்பாட்டுப் பணி நடைபெறவில்லை என்று கூறுகிறார். முதல்வரும், ஆளுநரும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சரவை முடிவை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றிருப்பது வேதனையான விஷயம் என்றார் அவர்.