விதைப் பண்ணையில் 17 பேருக்கு தினக்கூலி ஊழியருக்கான பணி ஆணை: அமைச்சர் வழங்கினார்
By DIN | Published On : 09th June 2019 01:26 AM | Last Updated : 09th June 2019 01:26 AM | அ+அ அ- |

விதைப் பண்ணையில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிய 17 பேருக்கு தினக்கூலி ஊழியருக்கான பணியாணையை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை வழங்கினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், மாதூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில் நீண்ட காலமாக வவுச்சர் அடிப்படையில் பணி செய்துவந்த 17 பேரை புதுச்சேரி அரசு தினக்கூலி ஊழியராக பணியமர்த்தியது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருந்தாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பணியாணை ஊழியருக்கு தரப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இவர்களுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி திருநள்ளாறில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊழியருக்கு பணியாணையை வழங்கினார். பணியாணைப் பெற்ற ஊழியர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குநர் ப.முகம்மது தாசீர், துணை வேளாண் இயக்குநர் ஆர்.கணேசன், அலுவலக கண்காணிப்பாளர் ம. தாமோதரன், வேளாண் அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.