கண்டமங்கலத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 14th June 2019 11:11 AM | Last Updated : 14th June 2019 11:11 AM | அ+அ அ- |

விழுப்புரம், ஜூன் 13: விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை, மத்திய அரசின் கள விளம்பரத் துறை, புதுவை மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கள விளம்பரத் துறை உதவி இயக்குநர் தி.சிவக்குமார் தலைமை வகித்து, யோகா பயில்வது உடலுக்கும், மனதுக்கும் நன்மையாகும். பெண்கள் யோகாவை முறைப்படி கற்றுக்கொண்டு, தங்களது அன்றாட நிகழ்வில் ஒன்றாக யோகப் பயிற்சியை இணைத்துக்கொள்ள வேண்டும். யோகப் பயிற்சியால் பெண்களுக்கு உடல் நலமும், மன நலமும் மேம்படும் என ஆலோசனை வழங்கினார்.
சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.ஆர்த்தி பங்கேற்று, பெண்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நோய் வராமல் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரகாஷ், சித்த மருத்துவ அலுவலர்கள் டி.ஹேமலதா, எல்.மாணிக்கவாசகம், ஆர்.ஷமீன்பர்கத் ஆகியோர் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்தும், யோகாவின் ஆரோக்கியப் பலன்கள் குறித்தும் விளக்கினர்.
புதுவை மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சி அலுவலர் பி.சித்ரா, மருத்துவர் எஸ்.சண்முகராம் ஆகியோர் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி, அதன் மருத்துவப் பலன்களை விளக்கினர். தொடர்ந்து, யோகா தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு யோகாசனப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், ஊராட்சிச் செயலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.