நிபா வைரஸ் அறிகுறியுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர் கவலைக்கிடம்
By DIN | Published On : 14th June 2019 07:27 AM | Last Updated : 14th June 2019 07:27 AM | அ+அ அ- |

நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம், உருளைமேடு பகுதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 53 வயதான தொழிலாளி, கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் கூலி வேலை செய்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பினார்.
அப்போது முதலே அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, கடலூரில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 10- ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தொழிலாளிக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை அறிந்து, அவரை பிரத்யேக வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். தொழிலாளியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, புணேவில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான், அவருக்கு நிபா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா? என்ற விவரம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறினர்.
இந்த நிலையில், தொழிலாளியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனியாக சிகிச்சை முறை எதுவும் இல்லை. இதனால், தற்போது வரை அந்த நோயாளிக்கு நிபா வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளத் தேவையான சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவரை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாகவும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.