நுண்ணீர் பாசன திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 14th June 2019 11:13 AM | Last Updated : 14th June 2019 11:13 AM | அ+அ அ- |

ஓமலூர், ஜூன் 13: ஓமலூர் வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் முக்கியமான திட்டமாக குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய சொட்டுநீர் பாசனம் என்ற திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைப்பற்றி ஓமலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரகாஷ் கூறியது:
ஓமலூர் வட்டாரம் தோட்டக்கலைத் துறையின் மூலமாக சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் சிறுகுறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு
வருகின்றன.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 700 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டது. இதைப்போலவே நிகழ் ஆண்டும் 575 ஏக்கர் பரப்பளவுக்கு சொட்டுநீர் பாசனம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கிராமங்கள்தோறும் முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. மேலும் இத்துறையின் மூலமாக காய்கறி நாற்றுகள், பழச்செடிகள், காய்கறிவிதைகள் போன்றவையும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே ஓமலூர் வட்டார விவசாயிகள் இத்திட்டங்களை பெற தகுந்த ஆவணங்களுடன், பனங்காடு பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம், மேலும் 04290-222055 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.