வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் வடம் பிடித்து தொடக்கி வைத்தனர்
By DIN | Published On : 14th June 2019 11:07 AM | Last Updated : 14th June 2019 11:07 AM | அ+அ அ- |

புதுச்சேரி, ஜூன் 13: புதுவை மாநிலம், வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேரை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே. நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.
வில்லியனூரில் புகழ் பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கி.பி. 11 -ஆம் நூற்றாண்டில் தருமபாலன் என்ற சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு பிரம்மோத்ஸவ விழா கடந்த 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 8- ஆம் தேதி பாரிவேட்டை நிகழ்வும், 10- ஆம் தேதி வெள்ளி யானை வாகன ஊர்வலமும், 12- ஆம் தேதி திருக்கல்யாண வைபோகமும் நடைபெற்றன.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சுவாமி மற்றும் அம்பாளுக்கு காலை சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் செய்விக்கப்பட்டன. தொடர்ந்து, உத்ஸவருக்கும் சிறப்பு அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து, உத்ஸவர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள திருத் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, தொடக்கி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, அமைச்சர்கள் அ. நமச்சிவாயம், கந்தசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேரைவடம் பிடித்து இழுத்தனர்.
வில்லியனூரின் 4 மாட வீதிகளிலும் மங்கல வாத்தியங்கள் முழங்க, வாண வெடிக்கைகளுடன் தேர் வலம் வந்தது.
நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு, சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.