276 அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு சென்டாக் மூலம் கலந்தாய்வை நடத்தக் கோரிக்கை

புதுவை சென்டாக் மூலம் 276 மருத்துவ (எம்பிபிஎஸ்) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு

புதுச்சேரி, ஜூன் 13: புதுவை சென்டாக் மூலம் 276 மருத்துவ (எம்பிபிஎஸ்) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேசஅனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் மு.நாராயணசாமி, பொருளாளர் விசிசி.நாகராஜன் ஆகியோர் வியாழக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீடாக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 106 இடங்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 55 இடங்களும், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 54 இடங்களும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 55 இடங்களும் என மொத்தம் 270 இடங்கள் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வை நடத்தி மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவறான புள்ளி விவரம். சென்டாக் நிர்வாகம் நிகழாண்டு 276 இடங்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து கலந்தாய்வு நடத்த வேண்டும். ஏனெனில், கடந்த ஆண்டு சென்டாக் மூலம் நிர்வாக ஒதுக்கீட்டில் தேர்வான ஒரு இடத்தைச் சேர்க்க வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி  நிர்வாகம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் உள்ள 5 இடங்களை புதுவை அரசு இட ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், அரசு ஒதுக்கீடாக 5 இடங்களுக்கும்,  54 இடங்கள் மட்டுமே பெறப்பட்ட பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கூடுதலாக ஒரு இடத்தையும் பெற்று மொத்தம் 6 மருத்துவ இடங்களைக் கூடுதலாகப் பெற்று 276 இடங்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெற்றால், அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில்  இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களை பெற முடியும். அப்படிப் பெற்றால் 15 இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு கிடைக்கும்.

ஆகவே, புதுவை அரசு காலம் தாழ்த்தாமல் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com