அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகோத்ஸவ விழா தொடக்கம்
By DIN | Published On : 06th March 2019 08:38 AM | Last Updated : 06th March 2019 08:38 AM | அ+அ அ- |

புதுச்சேரியை அடுத்த பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூரணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலின் மகோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, சங்கராபரணி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கரக ஊர்வலம் நடைபெற்றது. பிற்பகலில் கோயில் கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் 11-ஆம் தேதி பிற்பகல் ரணகளிப்பு, 12-ஆம் தேதி மாலையில் மயான கொள்ளை உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
வம்பாகீரப்பாளையத்தில்... வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் 23-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலையில் யாகசாலை பூஜையும், இரவு அம்பாள் பவள தேரில் வீதியுலாவும் நடைபெற்றது. விழா நடைபெறும் 9 நாள்களும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
இந்நாள்களில் அம்மன் யாளி, அன்னம், யானை, ரிஷபம், குதிரை வாகனங்களில் வீதியுலா வருகிறார். 11-ஆம் தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க சன்னியாசித் தோப்பில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுகிறது.