புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் கூட்டம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 06th March 2019 08:28 AM | Last Updated : 06th March 2019 08:28 AM | அ+அ அ- |

புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமைக்கு (மார்ச் 6) ஒத்திவைக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸýக்கு தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதுச்சேரி தொகுதியில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், புதுவை மாநில தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், முதல்வருமான வே.நாராயணசாமி தலைமை வகித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலரும், கட்சியின் புதுவை மாநில மேலிட பொறுப்பாளருமான
சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள்
க.லட்சுமிநாராயணன், ஆர்.கே.ஆர்.அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தீப்பாய்ந்தான், புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஏ.வி சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன், கட்சி நிர்வாகிகள் தேவதாஸ், விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கூட்டணிக் கட்சி மட்டுமன்றி, மாற்றுக் கட்சிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை எவ்வாறு ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கூட்டம் புதன்கிழமைக்கு (மார்ச் 6) ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இறுதி செய்யப்பட்டு கட்சித் தலைமைக்கு பரிந்துரைக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.