மனைவி எரித்துக் கொலை: கணவர் கைது
By DIN | Published On : 22nd March 2019 09:20 AM | Last Updated : 22nd March 2019 09:20 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பெட்ரோலை ஊற்றி எரித்து மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி அருகே கொம்பாக்கம் ஏரிக்கரை குப்பைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயநாதன் (50). களிமண் பொம்மைகள் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி வனஜா (40). தம்பதிக்கு பன்னீர்செல்வநாதன் என்ற மகன் உள்ளார். இவர், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு வனஜா வானரப்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இதற்கிடையே புதன்கிழமை ஜெயநாதன், வனஜாவின் தாய் வீட்டுக்குச் சென்று மனைவியை சமாதானப்படுத்தி, தனது வீட்டுக்கு அழைத்து வந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை ஜெயநாதன் மகன் வழக்கம்போல, கல்லூரிக்கு சென்ற பிறகு, வீட்டில் தனியாக இருந்த ஜெயநாதனுக்கும், வனஜாவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது, ஜெயநாதன், வனஜாவை தாக்கியதாகத் தெரிகிறது. கணவரிடமிருந்து தப்பிக்க மாடிக்கு செல்வதற்காக இரும்பு ஏணிப்படிக்கட்டில் வனஜா ஏற முயன்றாராம். இதனால், ஜெயநாதன் இரும்பு சங்கிலியால் வனஜாவின் காலைக் கட்டிவிட்டு, மோட்டார் பைக்குக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வனஜா மீது ஊற்றி தீவைத்து கொளுத்தியதாகத் தெரிகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே வனஜா இறந்தார்.
தகவலறிந்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் வீரபுத்திரசாமி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு கருகிய நிலையில் கிடந்த வனஜாவின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெயநாதனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...