ஹோலி பண்டிகை: ஜிப்மர், புதுவை பல்கலை.யில் கொண்டாட்டம்
By DIN | Published On : 22nd March 2019 09:28 AM | Last Updated : 22nd March 2019 09:28 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களில் ஹோலி பண்டிகை களை கட்டியது.
வட மாநில மக்களின் முக்கிய விழாவாகக் கருதப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வியாழக்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஜிப்மர் மருத்துவ வளாகத்தில் மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும், பூசியும் நடனமாடி ஹோலியை கொண்டாடினர். மேலும், அங்கு பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை நிரப்பி சேற்றை உருவாக்கி அதில் குதித்தும், ஒருவரை ஒருவர் தூக்கி சேற்றுக்குள் வீசியும் மகிழ்ந்தனர்.
இதேபோல, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் பல்கலை துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமையில் வடமாநில மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
மேலும், புதுச்சேரியில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் ரெயின்போ நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...