புதுவையை முற்றிலும் புறக்கணித்தது மத்திய அரசு: நாராயணசாமி
By DIN | Published On : 28th March 2019 09:34 AM | Last Updated : 28th March 2019 09:34 AM | அ+அ அ- |

மத்திய பாஜக அரசு புதுவையை முற்றிலும் புறக்கணித்துவிட்டது என்று முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது புதுவை மாநிலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களை புதுச்சேரியுடன் இணைக்கும் வகையில் 11 ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. காரைக்காலுக்கு 7 புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரிக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டு வரப்பட்டது. காரைக்காலில் தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை திட்டம், கிழக்கு கடற்கரைச் சாலைத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்ததன் மூலம் புதுவை மாநிலம் சுற்றுலாவில் வளர்ச்சி அடைந்தது. அதனால், வேலைவாய்ப்புகள் பெருகின. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவேன் என்று ரங்கசாமி கூறினார். அவர் சொன்ன மாதிரி புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு ஏதாவது முயற்சி எடுத்தாரா என்றால் இல்லை. அதேபோல, மோடி அரசு புதுவைக்கு என்று எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ரூ. 500 கோடியில் குடிநீர்த் திட்டம், ரூ. 2 ஆயிரம் கோடியில் சுற்றுலா வளர்ச்சித் திட்டம், ரூ. 84 கோடியில் துறைமுகம் தூர்வாரும் பணி என பல்வேறு திட்டங்களுக்கு புதுவையை ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு போராடி பெற்றது. பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த ரங்கசாமிக்கு நரேந்திர மோடி என்ன செய்தார். புதுவை மாநிலத்தை மோடி புறக்கணித்தார் என்பதுதான் உண்மை. ரங்கசாமி ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மூடியதுதான் அவரின் சாதனை என்றார் நாராயணசாமி.
கூட்டத்தில், புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம், புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., மதிமுக மாநில அமைப்பாளர் கபிரியேல் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...