இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
By DIN | Published On : 05th May 2019 12:06 AM | Last Updated : 05th May 2019 12:06 AM | அ+அ அ- |

புதுச்சேரி அண்ணா சிலை அருகே இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மனித உரிமைகள் - நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச் செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். மனித உரிமைகள் காப்பாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் லெனின் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
நிகழ்வில் பிளோமின் தாஸ், ஆறுமுக அடிகளார் ஆகியோர் தீவிரவாத எதிர்ப்பு குறித்தும், அன்பு, சகோதரத்துவம் பாராட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலர் அ.மு.சலீம், மதிமுக நிர்வாகி மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம், தமிழர் தேசிய முன்னணி நிர்வாகி தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மனித உரிமைகள் - நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் காளிதாஸ், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.