உணவக உரிமையாளர்களுடன் காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை
By DIN | Published On : 05th May 2019 01:34 AM | Last Updated : 05th May 2019 01:34 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் உணவக உரிமையாளர்களுடன் புதுச்சேரி வடக்கு காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி வடக்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள உணவக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வடக்கு காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், கண்ணன், நாகராஜ், காவல் உதவி ஆய்வாளர்கள் இனியன், வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், உணவகங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, காவல் துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க எந்தெந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், உணவகங்களில் எங்கு கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும், சந்தேக நபர்களை எப்படிக் கண்டறிவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.