பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவ உணவு படையல்
By DIN | Published On : 05th May 2019 05:28 AM | Last Updated : 05th May 2019 05:28 AM | அ+அ அ- |

புதுவை மாநிலம், பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவ உணவுடன் கூத்தாண்டவரை உயிர்ப்பிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் நடைபெறுவது போல, ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அந்த வகையில், நிகழ் ஆண்டு இந்தக் கோயில் திருவிழா மார்ச் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி கடந்த ஏப். 16-ஆம் தேதி இரவு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில்
இருந்து வந்திருந்த திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஏப். 17-ஆம் தேதி தேரோட்டம், அரவான் களப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்றிரவு திருநங்கைகள் தாலியை அகற்றி வெள்ளைப் புடவை அணிந்தனர்.
இந்த நிலையில், அரவான் பலி முடிந்த 16-ஆம் நாள் கூத்தாண்டவர் உயிர்ப்பித்து வருவதாக ஐதீகம்.
இதையொட்டி, வியாழக்கிழமை இரவு கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவு உணவுடன் கூடிய படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செயதனர். கும்பத்தில் வைத்து படையலிடப்பட்ட அசைவ உணவு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.