புதுவையில் 10 மையங்களில் இன்று நீட் தேர்வு

புதுவையில் 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் நீட் தேர்வை 9,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
Published on
Updated on
1 min read


புதுவையில் 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் நீட் தேர்வை 9,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (சஉஉப) கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில், 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத்தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு 1.15 மணிக்குள் வர வேண்டும். 1.30 மணிக்கு மேல் தேர்வு குறித்த நடைமுறைகள், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பரிசீலனை நடைபெறும். பிற்பகல் 1.45 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். 2 மணிக்குள் அதில் சுய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 
புதுச்சேரியில் தேர்வு மையங்கள்: புதுச்சேரி பிச்சவீரன்பேட் கிரிஸ்ட் பொறியியல் கல்லூரி, வில்லியனூர் ஆச்சாரியாபுரம் ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, பிள்ளைச்சாவடி புதுச்சேரி பொறியியல் கல்லூரி, புதுச்சேரி ஆச்சார்யாபுரம் ஆச்சார்யா சிக்ஷா மந்திர், மூலகுளம் ஸ்ரான்ஸ்போர்டு இன்டர்நேஷ்னல் பள்ளி, ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா, காலாப்பட்டு ஸ்டெடி பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷ்னல் பள்ளி, தேங்காய்த்திட்டு ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர் ஆகிய 10 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 
கட்டுப்பாடுகள்: தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வெழுத பால்பாயிண்ட் பேனா தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். ஜாமெட்ரி பாக்ஸ், பிளாஸ்டிக் கவர், கால்குலேட்டர், பேனா, அளவுகோல், அட்டை, பென்டிரைவ், ரப்பர், ஆகியவற்றைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசி, புளூடூத், ஹெட்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் ஆகியவற்றையும் எடுத்துச் செல்லக் கூடாது. மணிபர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, கைகடிகாரம், அணிகலன்கள், உணவுகள், தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதியில்லை.
வெளிர் நிறத்தில் அரைக்கை ஆடையை அணிந்து வர வேண்டும். முழுக்கை ஆடையை அணிந்து வரக்கூடாது. கலாசாரம், மத நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணிந்து வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் நண்பகல் 12.30 மணிக்குள் வந்து தெரிவிக்க வேண்டும். செருப்பு, குறைந்த உயரத்திலான (லோ ஹீல்ஸ்) செருப்புகளை அணிந்து செல்லலாம். கண்டிப்பாக ஷூ அணிந்து வரக் கூடாது. மாணவிகள் தலையில் கிளிப், மூக்குத்தி , காது வளையம் அணிந்து வரக் கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com