மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் புதுவை அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தர்ராமன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து புதுச்சேரி சிஐடியு அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2014-இல் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்ற பின்னரே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. ஆகவே, இந்த வழக்கில் புதுவை அரசு சரியான ஆதாரங்களைத் திரட்டி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு, மேல்முறையீடு செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவித தண்டனையும் இல்லாதது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
பேட்டியின் போது, சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வாலண்டினா, புதுவை மாநிலத் தலைவர் சந்திரா, செயலர் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.