டீசல் உபயோகத்தைக் குறைக்கும் கருவிக்கு 50% மானியம் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 05th May 2019 01:34 AM | Last Updated : 05th May 2019 01:34 AM | அ+அ அ- |

டீசல் உபயோகத்தைக் குறைக்கும் கருவிக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரியில் அந்தக் கருவியை அறிமுகப்படுத்திய அந்தப் பேரவையின் தேசியத் தலைவர் ம.இளங்கோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க அன்றாட தேவையாக டீசல் உள்ளது. இதற்காக தினமும் மீனவர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. பல நேரங்களில் மீன்கள் கிடைக்காமல் டீசலுக்கான முதலீட்டையும் இழந்து வருகின்றனர். இதனால், வரியின்றி டீசல் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் தொழில்நுட்ப வல்லுநரான சிசில் மனோகர் டேனியல் புதிதாக கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இதை விசைப் படகுகளில் உள்ள இயந்திரத்தில் பொருத்தினால், டீசல் உபயோகம் 20 சதவீதம் குறையும். இந்தக் கருவியை வாங்க மத்திய, மாநில அரசுகள் 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்
என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...