ஏஎப்டி பஞ்சாலை வளாகத்தில் வணிக வளாகம் கட்ட கோரிக்கை
By DIN | Published On : 19th May 2019 09:59 AM | Last Updated : 19th May 2019 09:59 AM | அ+அ அ- |

ஏஎப்டி பஞ்சாலை வளாகத்தில் வணிக வளாகம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை மாநில சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து இந்த சங்கத்தின் செயலர் சதானந்தன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில வரலாற்றில் முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நீடித்த பணி (பனி) போர் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இனிமேலாவது, புதுவை மாநில நலன், படித்த இளைய சமுதாயத்தினர் நலன், மீனவர்களின் நலன், விவசாயிகளின் நலன், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஏஎப்டி பஞ்சாலை கட்டடம் வலிமை இழந்துள்ளது. இதனால் அங்குள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய, நவீன இயந்திரங்கள் வைப்பதற்கு ஏற்ற வகையில் கட்டடங்களை கட்டி இயந்திரங்களை நிறுவி ஆலையை இயக்க வேண்டும். இல்லையெனில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம் (மால்) கட்ட வேண்டும்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான விருந்தினர்
மாளிகையும் கட்டலாம். இந்தப் பணிக்கு அதிக நிதி தேவைப்படும் என்று அரசு கருதினால் தனியார் பங்களிப்புடன் கட்டலாம். அங்கு வணிக வளாகமும், விருந்தினர் மாளிகையும் கட்டினால் குறைந்தது ஆயிரம் பேராவது வேலைவாய்ப்பு பெறுவர்.
அதில் பணிபுரிய விருப்பமுள்ள ஏஎப்டி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முன்னுரிமை தரலாம் என அதில் தெரிவித்துள்ளார் சச்சிதானந்தன்.