பல்கலை. தோட்டக்கலை ஊழியர்களுக்கு கோடைகால பாதுகாப்பு உபகரணங்கள்
By DIN | Published On : 19th May 2019 09:58 AM | Last Updated : 19th May 2019 09:58 AM | அ+அ அ- |

புதுவை மத்திய பல்கலைக்கழக தோட்டக்கலை ஊழியர்களுக்கு கோடைகால பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புதுவைப் பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறை சார்பில் பல்கலைக்கழக வளாகங்களில் மரம் மற்றும் பழக் கன்றுகள் நடும் விழா பல்கலைக்கழக வளாகத்தில்நடைபெற்றது. தோட்டக் கலைத் துறை அதிகாரி மணிவண்ணன் வரவேற்றார்.
பல்கலைக்கழகப் பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் கலந்துகொண்டு தோட்டக்கலைத் துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஊழியர்கள் அனைவரும் தங்களைக் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில் தொப்பி, குடிநீர் பாட்டில் மற்றும் கைத்துண்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து அவர், பல்கலைக்கழக வளாகங்களில் மரம் மற்றும் பழக் கன்றுகளையும் நட்டு வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பசுமையான சூழலைப் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறச் சூழல் மாறாமல் தூய்மையான காற்றைப் பேணிக்காப்பது ஒவ்வொரு மாணவர், ஊழியர்களின் கடமை.
பல்கலைக்கழகவளாகங்களில் பல பழைமையான,கிடைத்ததற்கரிய மரங்கள் உள்ளன. அவற்றின்தொன்மை மாறாமல் பாதுகாக்க மாணவர்கள் உதவ வேண்டும் என்றார் துணைவேந்தர் குர்மீத்சிங்.
விழாவில், பல்கலைக்கழகப் புல முதன்மையர்கள்,பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள், தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள தோட்டங்கள், பூங்காக்களில் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.