ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியர் வீட்டில் நகைகள் திருடிய சிறுவன், இளைஞர் கைது
By DIN | Published On : 19th May 2019 09:56 AM | Last Updated : 19th May 2019 09:56 AM | அ+அ அ- |

ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் நகைகள் திருடியதாக சிறுவன், இளைஞர் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் விபி சிங் நகர் பாரதிதாசன் வீதியில் வசிப்பவர் கருணாநிதி (64). ஜிப்மரில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் தனித்தனியே வசித்து வரும் நிலையில், கருணாநிதி மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த மே 16-ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட கருணாநிதியின் மனைவி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது ஏழரை பவுன் நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கருணாநிதி அளித்த புகாரில், தங்கள் வீட்டில் தச்சுப் பணியில் ஈடுபட்ட 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். அதன் பேரில் போலீஸார், கருணாநிதி வீட்டில் தச்சு வேலை செய்த புதுச்சேரி சண்முகாபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த விஜய் (24), நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த சிறுவன் ஆகிய இருவரையும் தனித்தனியாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் 2 பேரும் கருணாநிதி வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து விஜய் மற்றும் சிறுவனை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த ஏழரை பவுன் நகைகளை
பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விஜய் காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறுவன் அரியாங்குப்பம் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.