சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ஷாஜகான் அனுமதி
By DIN | Published On : 26th May 2019 12:28 AM | Last Updated : 26th May 2019 12:28 AM | அ+அ அ- |

திடீர் நெஞ்சு வலி காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுவை வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் சனிக்கிழமை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புதுவையில் முதல்வராகவும், ஆளுநராகவும் இருந்தவர் பரூக் மரைக்காயர். இவரது மகன் ஷாஜகான். புதுவை வருவாய் மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இரவு அமைச்சர் ஷாஜகானுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனே அவரை உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள் மு.கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் ஷாஜகானை சந்தித்து நலம் விசாரித்தனர். அவர் நலமுடன் இருக்கும் நிலையில், தொடர் சிகிச்சை பெற அவரை மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியது.
இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அமைச்சர் ஷாஜகான் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமைச்சர் ஷாஜகானுக்கு வெள்ளிக்கிழமை இரவு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து, பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.