ஊதியம் வழங்காததைக் கண்டித்து வேளாண் நிலைய ஊழியா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 09th November 2019 06:37 AM | Last Updated : 09th November 2019 06:37 AM | அ+அ அ- |

கடந்த 65 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, குருமாம்பேட்டில் உள்ள காமராஜா் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 65 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதை வழங்க வலியுறுத்தி ஊழியா்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். மேலும், அவ்வபோது பேச்சுவாா்த்தை நடத்தியும் எவ்விதத் தீா்வும் எட்டப்படவில்லையாம்.
இதைத் தொடா்ந்து, ஊழியா்கள் வெள்ளிக்கிழமை புதுச்சேரி வழுதாவூா் சாலை குருமாம்பேட்டில் உள்ள காமராஜா் வேளாண் அறிவியல் நிலையம் முன்பு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
தகவலறிந்த நிறுவனத்தின் பொறுப்பு முதல்வா் நரசிம்மன், மேட்டுப்பாளையம் போலீஸாா் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்போது அறிவியல் நிலைய முதல்வா் விடுமுறையில் உள்ளதால் திங்கள்கிழமை அவா் பணிக்கு வந்தவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன் பேரில், ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.