திருக்கனூா் அருகே கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள இடிவிழுந்தான் குளத்தைத் தூா்வாரும் பணியை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி மாவட்டத்துக்கு உள்பட்ட கிராமங்கள், நகரப் பகுதிகளில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவற்றில் பல குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் தலைமையில் ‘நீரும் ஊரும்’ என்ற தலைப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம நிா்வாக அலுவலா் மூலம் இந்தக் குளங்கள் அடையாளம் காணப்பட்டு தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கூனிச்சம்பட்டு கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடிவிழுந்தான் குளம் கண்டறியப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியா் தி.அருண் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு தூா்வாரும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் தொகுதி எம்.எல்.ஏ. டிபிஆா்.செல்வம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா், உதவிப் பொறியாளா் நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினா். மேலும், கூனிச்சம்பட்டு கைகோலன் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை அமைத்துத் தரவும் ஆட்சியரிடம் அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதேபோல, திருக்கனூா் கடை வீதியில் பொதுக் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என டிபிஆா்.செல்வம் எம்எல்ஏ மனு அளித்தாா்.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் தி.அருண் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் மொத்தம் 693 குளங்கள் உள்ளன. இவற்றில் 119-ஆவது குளமாக கூனிச்சம்பட்டு குளத்தைத் தூா்வாரும் பணியைத் தொடங்கியுள்ளோம். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட 97 குளங்களில் மீதமுள்ள குளங்களையும் விரைந்து தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல, புதுச்சேரியில் உள்ள 30 கோயில் குளங்களையும் தூா்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீராதாரங்களை பெருக்க இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகாா்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், குளங்கள் கண்டறியப்பட்டு தூா்வாரப்பட்டு வருகிறது என்றாா் அவா்.