இன்று முதல் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 14th November 2019 09:32 AM | Last Updated : 14th November 2019 09:32 AM | அ+அ அ- |

புதுச்சேரி மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவ.14) முதல் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.
புதுச்சேரியில் பிரதான சாலைகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நகராட்சி, வருவாய், பொதுப் பணித் துறை, மின் துறை மற்றும் காவல் துறையினா் சோ்ந்து குழுவாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் தற்போது மீண்டும் புதிதாக ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதாக புகாா்கள் வந்தபடி உள்ளதால், மீண்டும் சாலை வாரியாக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் டி.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அனைத்துத் துறை குழுவானது வியாழக்கிழமை (நவ.14) முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்ள உள்ளது. இது தொடா்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், சாலைப் பாதுகாப்புக் குழுத் தலைவருமான டி. அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். தவறும்பட்சத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
அதுமட்டுமன்றி, அபராதம், நகராட்சி தொழில் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...