காரைக்கால் மாவட்டத்தை தனி யூனியனாக பிரிக்க வேண்டும்
By DIN | Published On : 01st September 2019 03:53 AM | Last Updated : 01st September 2019 03:53 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தை தனி யூனியனாகப் பிரிக்க வேண்டும் என காரைக்கால் தொகுதி எம்.எல்.ஏ. அசனா வலியுறுத்தினார்.
புதுவை பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஏ.யு. அசனா பேசியதாவது:
ஏனாம் தொகுதிக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் வரி வருவாய் கிடைக்கும் நிலையில், இந்த மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
எனவே, காரைக்கால் மாவட்டத்தை தனி யூனியனாகப் பிரித்துவிடுங்கள். காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட ரூ. 30 கோடி நிதி போதுமானதாக இருக்காது. நிதியை உயர்த்தித் தர வேண்டும்.
தமிழகத்தை அடுத்து காரைக்கால் கடற்கரை சிறப்பு வாய்ந்தது. ஆனால், காரைக்கால் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காரைக்கால் மாவட்டத்தை முன்னேற்றவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
வஃக்பு வாரியத் தலைவர் பதவி நிரப்பப்படவில்லை. ஹஜ் பயணிகள் குழு அமைக்கப்படவில்லை.
இதற்கு அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் பதிலளித்துப் பேசியதாவது: ஹஜ் பயணிகள் குழு மற்றும் வஃக்பு வாரியத் தலைவர் விரைவில் நியமிக்கப்படுவர்.
இதைத் தொடர்ந்து பேசிய அசனா, காரைக்காலில் விளையாட்டுத் துறையை மாவட்ட தரவரிசைக்குக் கொண்டு செல்லவில்லை. காரைக்காலில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்கள் முன்னேற்றமடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.