ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
By DIN | Published On : 11th September 2019 09:34 AM | Last Updated : 11th September 2019 09:34 AM | அ+அ அ- |

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இலவச அரிசி திட்டத்தை தடுத்து மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநிலத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த இலவச அரிசி திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவுக்கான உத்தரவாதம் இருந்தது. இதனால், நியாயவிலைக் கடைகளின் ஊழியர்களுக்கும் வேலை கிடைக்கிறது.
இந்த நிலையில், இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வேண்டும் என்ற ஆளுநர் கிரண் பேடியின் கருத்து மக்கள் விரோதமானது. ஒரு குடும்பத்துக்கு அரிசிக்குப் பதிலாக பணம் கொடுத்தால், ஒரு கிலோ அரிசியின் விலையை மதிப்பிடும்போது, பணம் கொடுப்பதால் அந்த அளவுக்கு அரிசி கிடைக்காது. மேலும், அரிசி வாங்கப்படாமல் அந்த பணம் வேறு விதத்தில் செலவு செய்யப்படும். இதனால், உணவுப் பாதுகாப்பு என்ற உன்னதத் திட்டம் பாழாகும்.
சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், முதல்வர், அமைச்சர்கள் நேரடியாக ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து இலவச அரிசி திட்டத்தை தடுக்காதீர்கள் எனக் கோரிய பிறகும், இந்தப் பிரச்னையை மத்திய அரசுக்கு திசை திருப்புவது, கிரண் பேடி பகிரங்கமாக பாஜக ஆதரவு அரிசியல் செய்யும் நடவடிக்கை ஆகும்.
மக்களாட்சிக்கே அதிகாரம்; ஆளுநருக்கு அதிகாரமில்லை என உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், கிரண் பேடியின் ஜனநாயக விரோத செயல்கள் நின்றபாடில்லை. அனைத்துக்கும் மேலாக, இந்த இலவச அரிசி திட்டம் நிறுத்தப்பட்டால், குடும்பப் பெண்களுக்கு இது பேரிடியாக அமையும்.
மக்களாட்சியின் கொள்கை முடிவுக்கு எதிராக முட்டுக்கட்டை போடும், இலவச அரிசி திட்டத்தை தடுத்து மக்களுக்கு விரோதமாக செயல்படும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.