பொதுப்பணித் துறை தினக்கூலி ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 11th September 2019 09:35 AM | Last Updated : 11th September 2019 09:35 AM | அ+அ அ- |

புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் தினக்கூலி ஊழியர் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் விஜயசாரதி (35). பொதுப்பணித் துறையில் வாரிசுதாரர் அடிப்படையில் தினக்கூலி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இது தொடர்பாக, அவர் தலைமைப் பொறியாளரிடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த விஜயசாரதி செவ்வாய்க்கிழமை காலை தனது மனைவி கலைவாணி மற்றும் குழந்தையுடன் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு, திடீரென தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் பார்த்த சக ஊழியர்கள், அவர்களைத் தடுத்து, பெரியக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த பெரியக்கடை போலீஸார், தீக்குளிக்க முயன்ற தினக்கூலி ஊழியர் விஜயசாரதி மற்றும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினர்.
அப்போது, தனக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்னை தரக்குறைவாகப் பேசிய துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விஜயசாரதி முறையிட்டார். அவரிடம் புகாரைப் பெற்ற போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.