22-இல் சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கான போட்டி
By DIN | Published On : 11th September 2019 09:35 AM | Last Updated : 11th September 2019 09:35 AM | அ+அ அ- |

புதுவையில் சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கான போட்டிகள் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி.ருத்ரகெளடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு புதுவை அரசின் ஜவஹர் சிறுவர் இல்லம் சார்பில், மாநில சிறந்த படைப்பாளி குழந்தை விருது ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகளில் 9 முதல் 16 வயது வரை உள்ள புதுவை மாநிலப் பள்ளிகளில் (அரசு மற்றும் தனியார்) பயிலும் மாணவர்கள் படைப்பாற்றல் கலை, நிகழ்கலை, எழுத்து மற்றும் அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பங்கேற்கலாம்.
இந்த விருதுக்கான சிறந்த குழந்தைகளைத் தேர்வு செய்ய கொம்யூன் அளவிலான போட்டிகள், கீழ்கண்ட இடங்களில் வரும் 22-ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும்.
பாகூர், அரியாங்குப்பத்துக்கு அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், வில்லியனூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டுக்கு வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியிலும், உழவர்கரை நகராட்சிக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், புதுச்சேரி நகராட்சிக்கு புதுச்சேரி சவரிராயலு நாயக்கர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த மையங்களில் நடைபெறும் போட்டிகளில் தேர்வாகும் குழந்தைகளுக்கு புதுச்சேரி ஜவஹர் சிறுவர் இல்லத்தில் வரும் 30, 31-ஆம் தேதிகளில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும். போட்டிகளுக்கான விதிமுறைகள் மற்றும் நுழைவுப் படிவம் அந்தந்தப் பள்ளிகளில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளித் தலைமையின் கையொப்பத்துடன் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் வரும் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். மேலும், விவரங்களை 0413 - 2225751 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும், இணையதளத்திலும் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.