கோயில் கலசத்தை திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
By DIN | Published On : 29th September 2019 05:44 AM | Last Updated : 29th September 2019 05:44 AM | அ+அ அ- |

கோயில் கலசத்தைத் திருடியதாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி ஆர்.வி.நகர் மொட்டத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (33). அதே பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். சனிக்கிழமை அதிகாலை பார்த்த போது, ஆட்டோவைக் காணவில்லையாம்.
இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் ஐயப்பன் புகார் அளித்தார். இந்த நிலையில், சித்தன்குடி பகுதியில் ஸ்ரீகரு முத்துமாரியம்மன் கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த குரு தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில் கோபுரத்தின் மேல் இருந்த 3 கலசங்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகி கீர்த்தி, கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு புகாரின் பேரில், கோரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கோரிமேடு குற்றப் பிரிவு போலீஸார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சின்னையன்பேட்டை பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்த ஆட்டோ ஐயப்பனுடையது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், ஆர்.வி.நகர் மொட்டத்தோப்பு அரசுக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (27) என்பது தெரிய வந்தது. மேலும், ஆட்டோவை திருடிச் சென்று, சாரம் வேலன் நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுவனுடன் இணைந்து, சித்தன்குடி ஸ்ரீகரு முத்து மாரியம்மன் கோயிலில் கலசத்தைத் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, சுகுமார் அளித்த தகவலின் பேரில், 15 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் திருடிய 3 கலசங்கள், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஆட்டோவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், சிறுவனை அரியாங்குப்பம் சீர்திருத்தப் பள்ளியிலும், சுகுமாரனை காலாப்பட்டு மத்திய சிறையிலும் அடைத்தனர்.