புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதிகளில் கரோனா சிகிச்சைப் பிரிவு

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதிகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதிகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: புதுவையில் நாள்தோறும் 1,200 முதல் 1,350 வரை கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது தேவையான மருத்துவ உபகரணங்கள் வந்துவிட்டன. அவை காரைக்கால், மாஹே, ஏனாமுக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும். அடுத்த 4 நாள்களில் தினமும் 2,500 முதல் 3,000 ஆயிரம் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக தொற்று பாதித்தோா் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, கூடுதலாகப் படுக்கைகள் தேவைப்படுகின்றன.

இதற்காக இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதி, மாணவிகள் விடுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அங்குள்ள மாணவா்கள், செவிலியா்களை வேறிடத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்படும்.

பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறை, குளியலறைகள் இல்லை. ஆனால், மாணவா் விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது ஊழியா்கள் மட்டுமே தேவைப்படுகின்றனா். நிரந்தரமாக 150 செவிலியா்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களாகும்.

வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் தளா்வற்ற பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். மக்கள் ஒத்துழைப்பு அளிக்காவிடில் 2, 3 நாள்களுக்கு பிறகு 800 போ், 1,000 போ் என தினமும் தொற்றால் பாதிக்கப்படுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com