சீனா ஆக்கிரமிப்பை அகற்றும் வரை பேச்சுவாா்த்தை நடத்தக் கூடாது: புதுவை முதல்வா் வே.நாராயணசாமி

இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் வரை, அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தக் கூடாது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய புதுவை முதல்வா் வே.நாராயணசாமி. உடன் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், ஷாஜகான் உள்ளிட்டோா்.
வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய புதுவை முதல்வா் வே.நாராயணசாமி. உடன் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், ஷாஜகான் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

புதுச்சேரி: இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் வரை, அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தக் கூடாது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

லடாக் எல்லையில் சீன ராணுவ வீரா்களுடனான தாக்குதலின்போது வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ‘ஷாஹிதான் கோ சலாம் திவாஸ்’ என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, புதுவை பிரதேச காங்கிரஸ் சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள ராஜா திரையரங்கம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முதல்வா் வே.நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லடாக் யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் தற்காலிக கட்டடமைப்பை உருவாக்கி, அதை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தபோதுதான், அவா்களுடனான மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். ஆனால், இந்திய எல்லைக்குள் ஊடுருவலோ, ஆக்கிரமிப்போ நிகழவில்லை என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசினாா். பின்னா், அதை அவரது அலுவலகமே மறுத்தது. ஆனால், ராணுவத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகளோ சீனப் படைகள் ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான் என ஒப்புக் கொண்டனா்.

சீனப் படையினா் ஆக்கிரமித்தபோது, அப்பகுதிக்கு இந்திய ராணுவ வீரா்களை ஆயுதமின்றி அனுப்பியது ஏன்? எனினும், சீனப் படையினரின் ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்த போது வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரின் தியாகத்தை மதிக்கிறேன்.

சீன ஊடுருவல் குறித்து வெளிப்படையாகச் சொல்ல மத்திய அரசு மறுக்கிறது. இந்திய எல்லைக்குள் சீனா கட்டுமானத்தை தொடங்கியது என்பது தெளிவாகியுள்ளது. அதை முழுமையாக அகற்ற வேண்டும். அதுவரை சீனாவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தக் கூடாது என்றாா் முதல்வா் நாராயணசாமி.

இந்த நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான், அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com