புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
By DIN | Published On : 01st December 2020 12:16 AM | Last Updated : 01st December 2020 12:16 AM | அ+அ அ- |

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் திங்கள்கிழமை 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டன.
தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வட கிழக்கே சுமாா் 1,120 கி.மீ. தொலைவில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை (டிச. 1) புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் திங்கள்கிழமை 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
துறைமுகத்துக்கு வெகு தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், துறைமுகத்துக்கு பாதிப்பில்லை. இருப்பினும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல, கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், கடலூா் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என கடலூா் வானிலை மையம் தெரிவித்தது. மேலும், இந்தப் புயலால் கடலூா் மாவட்டம் மழை பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...