மீன் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 01st December 2020 12:24 AM | Last Updated : 01st December 2020 12:24 AM | அ+அ அ- |

புதுச்சேரி உப்பளம் அம்பேத்கா் சாலையில் மீன் கடைகளால் திங்கள்கிழமை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
புதுச்சேரி உப்பளம் அம்பேத்கா் சிலை தனியாா் விடுதி அருகே மீனவப் பெண்கள் பலா் சாலையோரங்களில் மீன் கடைகளை வைத்து வியாபாரம் செய்தனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்களை தேங்காய்த்திட்டு துறைமுகம் செல்லும் சாலையில், 300 மீட்டா் தொலைவில் கடைகளை அமைத்துக் கொள்ள நகராட்சி அனுமதி அளித்தது.
இந்த நிலையில், புதுச்சேரி உப்பளம் அம்பேத்கா் சாலையில் திடீரென 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் வைக்கப்பட்டன. அங்கு, மீன் வாங்க வந்தவா்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்தினா். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. மாறன் தலைமையிலான போலீஸாா், மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்களை விரட்டியடித்தனா். இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, அனைத்து மீன் கடைகளையும் துறைமுகம் செல்லும் சாலையில் மட்டுமே வைக்க வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தினா்.
மேலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கடையில் அமைத்திருந்த மீனவப் பெண்களையும், மீன் வாங்க வந்த பொதுமக்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...