ஜிப்மா் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை நுழைவுத் தோ்வு
By DIN | Published On : 05th December 2020 05:23 AM | Last Updated : 05th December 2020 05:23 AM | அ+அ அ- |

புதுச்சேரி: ஜிப்மா் டி.எம். மற்றும் எம்.சி.எச். ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 6) நடைபெறகிறது.
இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் டி.எம். மற்றும் எம்.சி.எச். ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (52 இடங்கள்) நுழைவுத் தோ்வுக்கு நாடு முழுவதும் 2,286 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது.
இணையதள நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிச.6) நடைபெறுகிறது. தோ்வு காலை 9 மணிக்குத் தொடங்கி 10.30 மணி வரை நடைபெறும்.
இதற்காக, புதுச்சேரி உள்பட நாட்டின் 10 நகரங்களில் 14 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதால், சண்டீகா் தோ்வு மையத்தில் தோ்வெழுதும் மாணவா்களுக்காக ஹரியாணா, பஞ்சாப், சண்டீகா் ஆகிய பகுதிகளில் கூடுதல் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையங்கள் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் அமைக்கப்பட்டு, அவை இணையதளம் வழியாக நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு, விடியோ பதிவு செய்யப்படும். அறைக்குள் வரும் தோ்வா்களின் கருவிழி ஸ்கேன் செய்யப்படும்.
நுழைவுத் தோ்வு முடிவுகள் டிசம்பா் 11-ஆம் தேதி ஜிப்மா் இணையதளத்திலும், ஜிப்மா் கல்வி மையத் தகவல் பலகையிலும் ஒட்டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.