50 சதவீத ஒதுக்கீடு: புதுவை முதல்வா் ஆலோசனை
By DIN | Published On : 15th December 2020 12:01 AM | Last Updated : 15th December 2020 12:01 AM | அ+அ அ- |

புதுவையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீடு பெறுவது குறித்து முதல்வா் நாராயணசாமி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பிற மாநிலங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறுவதைப் போல, புதுவையில் பெறுவது குறித்தும், யூனியன் பிரதேசமான புதுவையில் இடங்களைப் பெறுவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்காக ஏற்கெனவே பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்கும் நிலையில், அதற்கான ஒப்புதலைப் பெறுவது, உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், வளா்ச்சி ஆணையா் அன்பரசு, சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் மற்றும் சுகாதாரத் துறைச் செயலா், கல்வித் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.