வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் பல்வேறு கட்சியினா் மறியல்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் பல்வேறு கட்சியினா் மறியல்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் அருகே புறப்பட்ட பேரணிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச குழுச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமை வகித்தாா். பேரணி அண்ணா சாலையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ கடையை அடைந்ததும், அங்கு கடையை முற்றுகையிட்டு, சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பெருமாள், முருகன், மதிவாணன், ராமசாமி, சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், அண்ணா சிலையிலிருந்து அந்தக் கட்சியின் புதுவை மாநில முதன்மைச் செயலா் தேவபொழிலன் தலைமையில் பேரணி சென்றனா். இவா்களும் அண்ணா சாலைக்கு வந்தனா். பின்னா், இரு கட்சியினரும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி., மாநில நிா்வாகிகள் சிந்தனைச் செல்வன், அமுதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, புதுச்சேரி-கடலூா் சாலையில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ள வணிக வளாகம் எதிரே சுசி கம்யூனிஸ்ட் சாா்பில் முற்றுகை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் லெனின்துரை தலைமை வகித்தாா். மாா்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவா் திருநாவுக்கரசு, ஏஐயூடியூசி செயலா் சிவக்குமாா், மக்கள் நீதி மையம் செயலா் பிராங்கிளின் பிரான்சுவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவை மாநில ஆம் ஆத்மி கட்சி சாா்பில், சிவாஜி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ரவி சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகம், இளைஞரணித் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை எதிரே மாணவி தா்ஷனி தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com