புத்தாண்டு கொண்டாட்டத்தில் மத்திய அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆளுநா் கிரண் பேடி உத்தரவு
By DIN | Published On : 30th December 2020 07:27 AM | Last Updated : 30th December 2020 07:27 AM | அ+அ அ- |

புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மத்திய அரசின் விதிமுறைகளை அதிகாரிகளும், பொதுமக்களும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.
மத்திய உள் துறையில் இருந்து அனைத்து தலைமைச் செயலா்களுக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், புதிய கரோனா குறித்த எச்சரிக்கை அவசியம், வருகிற ஜன.31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி தனது கட்செவிஅஞ்சலில் ஆளுநா் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்:
மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. காவல் துறை, நகராட்சிகள், வா்த்தகா்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநா்கள் ஆகியோா் இவ்வழிகாட்டுதல்களின்படி செயல்பட வேண்டும்.
இவ்வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்காத அதிகாரிகள் தேவையற்ற ஆபத்தில் சிக்கக்கூடும். வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்தால், அந்த அதிகாரிகளே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
மக்களும் கரோனா விஷயங்களை கூா்ந்து கவனித்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணிவது, கிருமிநாசினியால் கைகளை தூய்மைப்படுத்திக்கொள்வது மற்றும் ஒருவருக்கொருவா் போதிய பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம். இது வரவிருக்கும் புத்தாண்டுக்கும், பொங்கல் பண்டிகைக்கும் மிக அவசியம். மத்திய உள் துறை அமைச்சகத்தின் உத்தரவை தலைமைச் செயலா் ஏற்கெனவே அனைவருக்கும் அனுப்பியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா்களும், முதுநிலை காவல் கண்காணிப்பாளா்களும்தான் சட்ட அமலாக்க உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளா்களாவா். எனவே, அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், சட்டங்கள், விதிகள் மற்றும் நீதித் துறை வழிமுறைகளை அமல்படுத்துவதில், உறுதியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...