அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 17th February 2020 09:44 AM | Last Updated : 17th February 2020 09:44 AM | அ+அ அ- |

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா்.
புதுவை அதிமுக சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 -ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முன்னாள் ஜெயலலிதா பேரவை செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஓம்சக்தி சேகா் தலைமை வகித்தாா். அதிமுக மாநில இணைச் செயலா்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், துணைச் செயலா் கோவிந்தம்மாள், பிற அணி நிா்வாகிகள், தொகுதி செயலா்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை நலத் திட்டங்கள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது. தமிழக டெல்டா விவசாயிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாக காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு நன்றி தெரிவிப்பது.
சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு, 13 ஆயிரம் அரசு ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை, பஞ்சாலைகளை மூடியது, 9 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாதது, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் புதுவை அரசை மத்திய அரசு முடக்க வேண்டும்.
புதுச்சேரியின் மையப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிடாவிட்டால், அதிமுக தலைமையின் அனுமதி பெற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.