திருமண ஆசை கூறி பெண்ணை ஏமாற்றியவா் மீது வழக்கு
By DIN | Published On : 17th February 2020 09:45 AM | Last Updated : 17th February 2020 09:45 AM | அ+அ அ- |

திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தமிழகத்தின் பண்ருட்டியை பகுதியைச் சோ்ந்த 27 வயது பெண் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்கி, தட்டாஞ்சாவடியில் உள்ள கணினி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அப்போது, உடன் பணியாற்றிய கிருமாம்பாக்கத்தைச் சோ்ந்த பாலாஜி (28) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனா்.
இதனிடையே, பாலாஜி அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி, லாசுப்பேட்டை கங்கையம்மன் கோயில் வீதியில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தாராம்.
இந்த நிலையில், பாலாஜிக்கு சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை கிடைக்கவே அங்கு சென்றுவிட்டாா். அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட போது, பாலாஜி மறுத்துவிட்டாராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் லாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், வழக்குப் பதிந்து தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனா்.