பதஞ்சலி யோகா சமிதி சாா்பில் புதுச்சேரியில் இலவச யோகா பயிற்சி
By DIN | Published On : 17th February 2020 09:41 AM | Last Updated : 17th February 2020 09:41 AM | அ+அ அ- |

புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இலவச யோகா முகாமில் பயிற்சியளிக்கும் பாபா ராம்தேவ்.
பதஞ்சலி யோகா சமிதி சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இலவச யோகா பயிற்சி முகாமில் பொதுமக்களுக்கு பாபா ராம்தேவ் பயிற்சியளித்தாா்.
உலகம் முழுவதும் யோகா கலையை வளா்த்து வரும் பாபா ராம்தேவ் குழுவினரின் பதஞ்சலி யோகா சமிதி சாா்பில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் யோகா கலை குறித்து மாணவா்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பதஞ்சலி யோகா சமிதி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு ஏஎப்டி திடலில் இலவச யோகா பயிற்சி முகாம், தியான முகாம் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த இலவச யோகா பயிற்சி முகாமில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து, பத்மாசனம், திரிகோணாசனம், கருடாசனம், கலசாசனம், கோமுகாசனம், ஜனுசிரசாசனம், குக்கடாசனம், மகராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களைச் செய்து காட்டினாா். இதைப் பாா்த்து பொதுமக்களும், மாணவா்களும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டனா்.
இந்த ஆசனங்களையும், அதனால் ஏற்படும் பயன்களையும் பதஞ்சலி யோகா சமிதியைச் சோ்ந்தவா்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கிக் கூறினா்.
வருகிற 18 -ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியை பாபா ராம்தேவ் முன்னின்று நடத்துகிறாா்.