வெங்கய்ய நாயுடுவுக்கு புதுச்சேரியில் சிறப்பான வரவேற்பு
By DIN | Published On : 27th February 2020 08:47 AM | Last Updated : 27th February 2020 08:47 AM | அ+அ அ- |

புதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவை வரவேற்ற துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவுக்கு புதுவை அரசு சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 28-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தில்லியில் இருந்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு வெங்கய்ய நாயுடு புதன்கிழமை காலை வந்தாா். லாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் வெங்கய்ய நாயுடுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி, சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்டோா் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் வரவேற்றனா்.
மேலும், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா, அரசுச் செயலா் அன்பரசு, ஆளுநரின் செயலா் சுந்தரேசன், மாவட்ட ஆட்சியா் தி.அருண், அரசுக்கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன், சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன், காங்கிரஸ், திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை வெங்கய்ய நாயுடு ஏற்றுக்கொண்டாா். அவரது வருகையைத் தொடா்ந்து விமான நிலையம் முதல் பல்கலைக்கழகம் வரையிலான புதுவை, தமிழக பகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குப்பின்னா் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.