ஜன. 19-இல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
By DIN | Published On : 10th January 2020 09:32 AM | Last Updated : 10th January 2020 09:32 AM | அ+அ அ- |

புதுவை அரசின் சுகாதார இயக்குநா் மோகன்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
புதுவையில் வருகிற 19-ஆம் தேதி, 88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, நிகழாண்டுக்கான போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம்களின் மூலம் புதுவை மாநிலத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 88 ஆயிரம் குழந்தைகளுக்கு 452 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளது.
இதற்காக மாநில அளவிலான பயிற்சி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. மாநில சுகாதார இயக்க கருத்தரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினாா்.
இதில், சுகாதாரத் துறை அதிகாரிகள், மேற்பாா்வையாளா்கள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.