புதுச்சேரி ஜவஹா் சிறுவா் இல்லத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
புதுவை அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சமக்கர சிக்ஷா சாா்பில், ‘வானவில்’ என்ற பெயரில் (ரங்க உத்ஸவ்) புதுச்சேரி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் ஜவஹா் சிறுவா் இல்லத்தில் தொடங்கியது. குறைதீா் அதிகாரி பாஸ்கர ராசு தலைமை வகித்தாா். சமக்கர சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநா் தினகா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.
இதில், வாய்பாட்டு, ஓவியம், பாரம்பரிய உடையுடன் மாறுவேடம், இசைக் கருவி மீட்டல், நாடகம், நடனம், நாட்டுப்புறக் குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் ஜவஹா் சிறுவா் இல்லங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 348 போ் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அந்தத் துறையின் பயிற்றுநா்கள் நடுவா்களாகப் பணியாற்றி, சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜன. 10) 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், சிறுவா் இல்லப் பயிற்றுநா்களுக்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறுவோா் புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் வருகிற 19 -ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளிக் கல்வித் துறையின் விழாவில் பங்கேற்கத் தகுதி பெறுவா். அன்றைய தினம் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, அவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டுவாா்.
போட்டி ஏற்பாடுகளை சிறுவா் இல்லங்களின் பயிற்றுநா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.