‘பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்’
By DIN | Published On : 10th January 2020 09:29 AM | Last Updated : 10th January 2020 09:29 AM | அ+அ அ- |

பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என புதுவை மக்கள் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் மு.ப.சிவசரவணன் தலைமையிலான நிா்வாகிகள் முதல்வா் வே.நாராயணசாமியிடம் அளித்த மனு:
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். குழந்தைகளின் ஆரம்பக் கல்வி தாய்மொழி தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் மழலையா் வகுப்புகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு, 5 வயதுக்கு மேல் மட்டுமே குழந்தைகளைப் பள்ளியில் சோ்க்க அனுமதிக்க வேண்டும்.
இளநிலை, முதுநிலை தமிழ் பயில வரும் அனைத்து மாணவா்களுக்கும் இலவச உயா்கல்வி அளிக்க வேண்டும். தமிழ் படித்து முடிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து, குழந்தைகள் தமிழில் பேசும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.