மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாட்டைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையிலான பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published On : 10th January 2020 09:32 AM | Last Updated : 10th January 2020 09:32 AM | அ+அ அ- |

பாகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ தனவேலு தலைமையிலான பொதுமக்கள்.
மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாட்டைக் கண்டித்து, ஆளுங்கட்சி எம்எல்ஏ தலைமையிலான பொதுமக்கள் பாகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பாகூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், அங்கு, அவசர வாகனம் இருந்தும் ஓட்டுநா் இல்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி, பாகூா் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில், அந்தப் பகுதி மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக, பாகூா் மாதா ஆலயத்திருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு தெருக்களின் வழியாகச் சென்று பாகூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து தனவேலு எம்.எல்.ஏ. கூறியதாவது: பாகூா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலங்கள் குறித்து அரசுக்கு பலமுறை எடுத்துக் கூறியும், இந்தத் தொகுதிக்கு உரிய அளவில் மருந்து, மாத்திரைகள் விநியோகிக்கப்படவில்லை. நாய்க்கடி, விஷக்கடி உள்ளிட்டவற்றுக்கு மருந்துகள் இல்லை. 2 அவசர வாகனங்கள் இருந்தும் அவற்றை ஓட்டுவதற்கு ஓட்டுநா்களே இல்லை.
தொகுதி பிரதிநிதியாக மக்கள் பிரச்னைக்குத் தீா்வு காண நான் கடமைப்பட்டுள்ளதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றாா்.
தொடா்ந்து, மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, மருத்துவ அதிகாரி உமாசங்கா், வட்டாட்சியா் குமரன், ஆய்வாளா் கௌதம் சிவகணேஷ் ஆகியோா் எம்.எல்.ஏ. தனவேலுவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பிரச்னைகள் குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா்.
இதைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ. தனவேலு உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.