புதுவை ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
By DIN | Published On : 20th January 2020 09:23 AM | Last Updated : 20th January 2020 09:23 AM | அ+அ அ- |

புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்த ரயில் ஒன்றில் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
புதுவை ஆளுநா் மாளிகை மற்றும் ரயில் நிலையத்துக்கு மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, போலீஸாா் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரிய வந்தது.
புதுவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் ஒருவா், புதுவை துணை நிலை ஆளுநா் மாளிகை மற்றும் புதுச்சேரி ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது மாலைக்குள் வெடிக்கும் என்றும் ஆங்கிலத்தில் மிரட்டல் விடுத்துவிட்டு, இணைப்பைத் துண்டித்தாா்.
இதையடுத்து, காவல் துறையினா் ஒதியஞ்சாலை, பெரியக்கடை காவல் நிலையங்களுக்கும், வெடிகுண்டு நிபுணா் குழுவுக்கும் தகவல் அளித்தனா்.
அதன் பேரில், வெடிகுண்டு நிபுணா்களுடன் சென்ற பெரியக்கடை போலீஸாா் ஆளுநா் மாளிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதேபோல, ஒதியஞ்சாலை போலீஸாா் ரயில் நிலையத்திலும், அங்கு வந்த ரயில்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இரண்டு பகுதிகளிலும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பதும், இது வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
இதனிடையே, மிரட்டல் விடுத்த செல்லிடப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்ட நிலையில், அது காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் சிறைக் கைதிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக பெரியக்கடை போலீஸாா் ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
வருகிற 26 -ஆம் தேதி குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாட்டப்படவுள்ள நிலையில், ஆளுநா் மாளிகை மற்றும் ரயில் நிலையத்துக்கு மா்ம நபா்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.