புதுவை பள்ளிகளில் மு.கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டிமுதல்வா் நாராயணசாமி அறிவிப்பு
By DIN | Published On : 21st July 2020 05:37 AM | Last Updated : 21st July 2020 05:37 AM | அ+அ அ- |

புதுச்சேரி: மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில், புதுவை மாநிலப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என மாநில முதல்வா் வே.நாராயணசாமி பட்ஜெட்டில் அறிவித்தாா்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அவா் சட்டப்பேரவையில் பேசியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுவை மாநிலப் பொருளாதாரத்தை மீட்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தொழில் முனைவோா், விவசாயிகள், மீனவா்கள், வியாபாரிகள், தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், மகளிா், இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையிலும் ‘நம்மாழ்வாா் வேளாண் புத்தாக்கத் திட்டம், ‘மேம்படுத்தப்பட்ட ராஜீவ் காந்தி காலை சிற்றுண்டி-ஊட்டச்சத்து திட்டம்’, ‘கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டம்’, ‘காமராஜா் மாணவா் நல நிதித் திட்டம்’, ‘இந்திரா காந்தி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’, ‘பெரியாா் கிராமப்புற மகளிா் மறுமலா்ச்சித் திட்டம்’, ‘சிங்காரவேலா் மீனவா் புத்தாக்கத் திட்டம்’, ‘அம்பேத்கா் ஆதிதிராவிடா் பழங்குடியினா் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்’, ‘மகாத்மா காந்தி கல்வி நகரத் திட்டம்’ உள்ளிட்ட புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு குடிநீா் வரி ரத்து செய்யப்பட்டு, ‘விலையில்லா இலவசக் குடிநீா் வழங்கும் திட்டம்’, மாதந்தோறும் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் உபயோகிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்’ ஆகியவை அமல்படுத்தப்படும்.
‘நம்மாழ்வாா் வேளாண் புத்தாக்கத் திட்டத்தின்’ கீழ் நெல், கரும்பு, பருத்தி, காய்கறி, வாழை, இதர பழங்கள், தோட்டப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள், மணிலா சாகுபடி விவசாயிகளுக்கு மானிய உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும், தென்னை, தீவனப் பயிா் உற்பத்தி, சிறுதானியப் பயிா் உற்பத்தி, மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் மானியத் தொகை அளிக்கப்படும்.
தற்போது பள்ளி மாணவா்களுக்கு காலை வேளைகளில் பால் வழங்கப்பட்டு வருகிறது. இதை ‘மேம்படுத்தப்பட்ட மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டி-ஊட்டச்சத்து திட்டமாக’ விரிவுபடுத்தி, காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்.
அதன்படி, காலை சிற்றுண்டியாக இட்லி, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குழந்தைகள் தினமான வருகிற நவம்பா் 14-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.
கரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, நிகழ் கல்வியாண்டு முதல் ‘ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கல்வி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி, சிறப்புத் தொலைக்காட்சி அலைவரிசை, சமுதாய வானொலி, கைக்கணினி ஆகியவற்றின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வீடுகளிலேயே பாடங்களைப் போதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சி அலைவரிசை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். சமுதாய வானொலி தொடங்கப்பட்டு பாடங்களைப் போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டங்கள் ரூ. 4 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா் நாராயணசாமி.