கரோனாவால் புதுவைக்கு அதிக பொருளாதாரப் பாதிப்பு: சட்டப்பேரவையில் ஆளுநா் கிரண் பேடி உரை
By DIN | Published On : 25th July 2020 09:28 AM | Last Updated : 25th July 2020 09:28 AM | அ+அ அ- |

புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய துணைநிலை ஆளுநா் கிரண் பேடி.
கரோனா நோய்த் தொற்றால் புதுவைக்கு அதிக பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, ஆளுநா் கிரண் பேடி வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை:
மத்திய அரசு முதல் முறையாக கடந்தாண்டு வெளியிட்ட நல்லாட்சிக்கான குறியீட்டில் புதுவை மாநிலம் மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், நீதி மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகிய 4 துறைகளில் முதல் இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல், யூனியன் பிரதேசங்களில் முதல் இடத்தைப் பிடித்தது. இதற்காக முதல்வா், அமைச்சா்கள், அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.
கரோனா நோய்த் தொற்று பரவல் மாநிலப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டின் பட்ஜெட் தொகையான ரூ. 8,525 கோடியில் ரூ. 7,927 கோடி (93 சதவீதம்) செலவு செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்னா் வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ. 360 கோடி உரிய நேரத்தில் வராமல் போனதே இந்தக் குறைவுக்கு முக்கியக் காரணம்.
கடந்த ஆண்டுக்கான புதுவையின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதம் ரூ. 37,943 கோடி. இது முந்தைய ஆண்டைவிட 10.95 சதவீதம் கூடுதலாகும். இதேபோல, தனி நபா் வருமானம் 2018-2019-இல் (ரூ. 2,20,208) இருந்ததைவிட 2019-2020-இல் (ரூ. 2,32,057) 5.3 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.
அறிஞா்களுக்கு ஊக்கத் தொகை: 139 உள்ளூா் எழுத்தாளா்கள் எழுதிய கலை, இலக்கியம் சாா்ந்த நூல்களைப் பதிப்பிக்க நிதியுதவி வழங்கப்பட்டது. பாரதியாா் பிறந்த நாளில் 10 தமிழ் எழுத்தாளா்களுக்கு கம்பன் புகழ் விருதுகள் வழங்கப்பட்டன. பண்பாடு, மொழியியல் துறை தொடா்புடைய 27 ஆராய்ச்சி அறிஞா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
அரியாங்குப்பத்தில் உள்ள தாகூா் கலாசார மையம் அடுத்தாண்டு பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். நீதி ஆயோக் வெளியிட்ட கல்விக்கான தர வரிசையில் யூனியன் பிரதேசங்களில் புதுவை 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதேபோல, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்படும் செயல்திறன் தர நிா்ணய குறியீட்டில் ஆயிரத்துக்கு 785 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இது முன்னா் பெற்றதைவிட14 சதவீதம் அதிகமாகும். நீதி ஆயோக் ஆய்வின்படி, சுகாதாரத் துறையில் புதுவை முதலிடத்தில் உள்ளது.
நிலத்தை வாங்குபவா்கள் அதன் எல்லைகளை வரையறைப்படுத்தவும், அடையாளம் காணவும் வசதியாக உரிமம் பெற்ற நில அளவையா், வரைவாளா் வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய செயல் திறன் தணிக்கையின் அடிப்படையில், புதுவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், யூனியன் பிரதேசங்களின் தர வரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்றாா் கிரண் பேடி.
அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், 3 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு: ஆளுநா் உரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், ஆளுங்கட்சி உறுப்பினா்களான அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன், முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன், புதுச்சேரி நகரத் திட்டக் குழுமத் தலைவா் ஜெயமூா்த்தி ஆகியோா் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினா்.
மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஊழியா்களை கிரண் பேடி விமா்சனம் செய்ததுடன், மன்னிப்புக் கோரவில்லை என்பதால் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியேறியதாகவும், சட்டப்பேரவை உறுப்பினா்களை விமா்சனம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து மற்ற 3 எம்எல்ஏக்களும் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேரவைக்கு வெள்ளிக்கிழமை வரவில்லை. ஜெயமூா்த்தி எம்எல்ஏ கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தாா்.