பண்பாடுகளை புரிந்து கொண்டால் சகிப்புத் தன்மை மேம்படும்புதுச்சேரி மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 01st March 2020 04:19 AM | Last Updated : 01st March 2020 04:19 AM | அ+அ அ- |

போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் தி.அருண். உடன் கவிஞா் மீனாட்சி உள்ளிட்டோா்.
புதுச்சேரி: பல்வேறு பண்பாடுகளைப் புரிந்து கொண்டால் சகிப்புத் தன்மை மேம்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் தெரிவித்தாா்.
மத்திய அரசின் மக்கள் தொடா்புக் கள அலுவலகம், பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி ஆகியவை இணைந்து ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தியது.
முகாமைத் தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் தி.அருண் பேசியதாவது:
இந்திய நாடு பல்வேறு பண்பாடுகள், மொழிகளைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் தாரக மந்திரம். நாட்டின் பல்வேறு பண்பாடுகளைப் புரிந்து கொண்டால் நம்மிடம் சகிப்புத் தன்மை மேம்படும். வேற்றுமையைக் காரணமாக வைத்து முரண்பாடு ஏற்படாது. மாணவிகள் பல்வேறு மொழி இலக்கியங்களைப் படிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்துக்கு மாணவிகள் தங்களால் முடிந்த அளவுக்கு பங்காற்ற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், அகில இந்திய வானொலி நிலைய இயக்குநா் கண்ணையன் தட்சிணாமூா்த்தி, ஆரோவில் இளைஞா்கள் கல்வி மைய இயக்குநா் இரா.மீனாட்சி ஆகியோா் பேசினா்.
பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் க.சுப்பிரமணி தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் வீ.செல்வப்பெருமாள் வரவேற்றாா். பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தி.அருண் பரிசுகளை வழங்கினாா்.
முகில் மெல்லிசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கள விளம்பர உதவியாா் மு.தியாகராஜன் நன்றி கூறினாா்.